தேனி மாவட்டத்திற்குள் ‘அரிக்கொம்பன்’ யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனை பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து லாரி மூலம் கொண்டுவரப்பட்டன.
அவை கம்பத்தில், கூடலூர் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புளியந்தோப்பில் நிறுத்தப்பட்டன. இங்கு கும்கி யானைகளை பார்ப்பதற்காகவும், அதனுடன் புகைப்படம் எடுத்து கொள்வதற்காகவும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கும்கி யானைகள் கம்பம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு 3 கும்கி யானைகளும் தனித்தனியாக நிறுத்தப்பட்டு பாகன்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்த சூழலில் அரிக்கொம்பன் யானை உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகநாதர் கோவில் வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக கூறப்பட்டது. அந்த யானை வனத்துறையினரிடம் சிக்காமல் உலா வந்தது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திய பிறகு தான் கும்கி யானைகளுக்கு வேலை என்பதால் கும்கி யானைகள் கடந்த சில நாட்களாக கம்பம் வனத்துறை அலுவலகத்திலேயே இருந்தன. கும்கி யானையுடன் பாகன்கள் மற்றும் வனத்துறையினரும் இருந்தனர்.
இந்நிலையில் கம்பம் அருகே சண்முகா அணையில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் 7 நாட்களாக தேனியில் உலா வந்த அரிக்கொம்பன் யானை பிடிபட்டுள்ளது. தேனி சின்னமனூர் அருகே உலா வந்த அரிக்கொம்பன் யானையை 4 மயக்க ஊசிகள் செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டநிலையில், அவற்றின் உதவியுடன் அரிக்கொம்பனை லாரியில் ஏற்றி மாற்று இடத்திற்கு வனத்துறையினர் கொண்டு செல்கின்றனர். ஆனால் அரிக்கொம்பன் எங்கு விடப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.