அரியானாவில் தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருக்கிறார். 90 தொகுதிகளைக்கொண்ட அரியானா சட்டமன்றத்தின் பதவி காலம் முடிவடைவதால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
பாரதிய ஜனதா தனது கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. இந்தியா கூட்டணியும் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் களம் இறங்கி உள்ளது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைமையில் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கும்படி காங்கிரசிடம் வலியுறுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் 7 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் இடங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, நேற்றைய நிலவரப்படி, காங்கிரஸின் மத்திய தேர்தல் குழு 90 இடங்களில் 66 இடங்களுக்கு வேட்பாளர்களை அங்கீகரித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராகவ் சதா, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
“ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) 10 இடங்களைக் கோருகிறது. ஆனால், மொத்தமுள்ள 90 இடங்களில் 7 தொகுதிகளை மட்டுமே தர காங்கிரஸ் தயாராக உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா, கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், பல்வேறு வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மல்யுத்த வீராங்களை வினேஷ் போகத் மற்றும் வீரர் பஜ்ரங் புனியா ஆகியோரை காங்கிரஸ் வேட்பாளர்களாக நிறுத்துவது குறித்தும் காங்கிரஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இவர்கள் இருவரும் தேர்தல் களத்தில் குதிப்பார்களா என விரைவில் தெரியவரும்