தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலும் வாழும் கிறிஸ்துவ பெருமக்கள் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த நிகழ்வினை நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். கிறிஸ்துவ சமுதாயத்து மக்கள் இந்நாளில் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக அளிக்கின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடிகிறது.
கிறிஸ்துவ சமுதாயமே மக்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதில் அளப்பரிய பங்காற்றி வருகிறது. முதியோர் இல்லங்கள், ஏழை, எளியவர்களுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு புகலிடம் வழங்குவது ஆகியவை இச்சமுதாயத்தின் மிகச் சிறந்த நற்பணிகளாக விளங்கி வருகின்றன. இயேசு பிரான் போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்துவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன்.
கிறிஸ்துவ சிறுபான்மை சமுதாயத்தினர் ஒன்றிய பா.ஜ.க. அரசால் பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார்கள். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டு வருகிறது. இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்