திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு இன்று 71வது பிறந்த தினம். இதையொட்டி காலையில் அவர் தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்றார். கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இன்று, உழைப்பு, உழைப்பு, உழைப்பு …. அது தான் ஸ்டாலின் என கலைஞர் போற்றிய வாசகங்கள் மலர்களால் எழுதப்பட்டு இருந்தது.
கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி் பலர் வாழ்த்து தெரிவித்தனர். போலீஸ் அதிகாரிகள் புத்தகங்கள் பரிசு வழங்கினர். அவற்றை முதல்வர் அன்புடன் ஏற்றுக்கொண்டார்.
முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், டிஆர் பாலு, கே. என். நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.., எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என ஆயிரகணக்கானோர் வந்திருந்தனர். பின்னர் அண்ணா நினைவிடத்தி்லும், பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி்னார்.
பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். முதல்வர் நீண்ட ஆயுள் , ஆரோக்கியத்துடன் வாழ்த்து சேவையாற்ற வேண்டும் என தனது எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபோல காங்கிரஸ் தலைவர் கார்கே, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மநீம தலைவர் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அனைத்துக்கட்சித்தலைவர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். ஏராளமானோர் வரிசையில் நின்று பொன்னாடை, புத்தகங்கள் பரிசு வழங்கினர்.