சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்தார்.
இப்படித்தான் கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யபிரியா வந்தார். அப்போது அங்கு சதீஷும் வந்தார். ரயில் வரும் வரை காத்திருந்த சத்யபிரியாவிடம் போய் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு சத்யபிரியா, மறுக்க சதீஷுக்கு கோபம் வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து ரயில் வந்தது. அப்போது சத்யபிரியாவை தள்ளிவிட்டார். இதனால் அந்த பெண் ரயில் மோதி இறந்துவிட்டார். தனது மகள் இறந்த துயரத்தை ஏற்க முடியாத மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண்ணின் தாய் வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
கடந்த 27ம் தேதி இந்த வழக்கில் சதீஷ் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்ததுடன், அவருக்கான தண்டனை 30ம்தேதி(இன்று) அறிவிக்கப்படும் என்றார். அதன்படி இன்று பிற்பகல் தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி சதீசுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கொலைக்காக இந்த தண்டனை விதித்தார்.
மாணவியை பின்தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்ததற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.