தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தஞ்சை மாநகர செயலாளர் ராஜன், ஒன்றிய செயலாளர் சாமியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
போராட்டத்தில் , ஆந்திரா, பாண்டிச்சேரி மாநில அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கியது போல் தமிழ்நாடு அரசும் உடனே உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய நூறுநாள் வேலையை தொடர்ந்து கொடுத்திட வேண்டும்.
8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்காமல் 4 மணி நேரம் வேலை வழங்க வேண்டும். தினக்கூலி ரூ.319-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.