மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், காசாவில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் நடந்த ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மக்கள் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் (62) மட்டும் இஸ்ரேல் ராணுவத்திடம் இருந்து தொடர்ந்து தப்பி வந்தார். மக்களோடு மக்களாக அவர் கலந்திருந்ததால், அவர் பிடிபடவில்லை. அவரை உயிரோடு அல்லது பிணமாக மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் சபதம் செய்திருந்தது. ரபா மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, ராணுவத்தினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் செயல்படும், 828வது படைப்பிரிவின் வீரர்கள், மூன்று பயங்கரவாதிகளை அடையாளம் கண்டனர். ராணுவ வீரர்களை கண்டதும் பயங்கரவாதிகள் ஒவ்வொரு வீடாக மாறி மாறி தப்பி ஓடினர். இதில் இரு பயங்கவராதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதும், ஒரு பயங்கரவாதி மட்டும் ஒரு வீட்டுக்குள் ஒடி ஒளிந்து கொண்டார். இதையடுத்து அந்த கட்டிடத்தை இஸ்ரேல் ராணுவ டேங்க் குண்டு வீசி தகர்த்தது. அதன்பின் அந்த கட்டிடத்துக்குள் யாரும் இருக்கிறார்களா என்பதை அறிய ட்ரோன் கேமரா பறக்கவிடப்பட்டது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையே ஷோபா ஒன்றில் ஒரு வயதான நபர் தனது முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தார். அவர் அருகே ட்ரோன் கேமரா பறந்து வந்தபோது, அவர் ஒரு மரக்கட்டையை எடுத்து ட்ரோன் மீது வீசும் காட்சி பதிவாகியது. இதையடுத்து அந்த கட்டிடத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த நபர் இறந்தார். அவர் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் என்பது பயோமெட்ரிக் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. ட்ரோன் கேமரா மீது யாஹியா சின்வர் கட்டையை தூக்கி வீசும் வீடியோவை சமூக ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்டது