பாலஸ்தீனத்தின் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாதி அமைப்பு நேற்று காலை 6.30 மணிக்கு Operation Al-Aqsa Flood என்ற பெயரில் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கடல், தரை மற்றும் வான்வழியில் இத்தாக்குதல்களை நடத்தியது. இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. Operation Iron Swords என்ற பெயரில் இஸ்ரேல் படைகள் காஸா முனை, மேற்கு கரை பகுதியில் நிலை கொண்டுள்ள ஹமாஸ் ஜிஹாதிகளுக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இஸ்ரேலின் டெல் அவிவ் வடக்கு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களையும் தெற்கு இஸ்ரேலுக்குள் ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனர்கள் ஊடுருவலையும் ஹமாஸ் மேற்கொண்டது. இதனையடுத்தே ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா முனை பகுதியில் அதிரடி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதுவரையிலான தாக்குதல்களில் இஸ்ரேல் தப்பில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் பாலஸ்தீனம் பகுதியில் 240 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இருதரப்பிலும் சுமார் 400-க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஊடகங்கள். இருதரப்பிலும் தற்போது வரை 3,000 பேர் வரை படுகாயமடைந்து சிகிச்சை பெறுவதாகவும் இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளன. இத்தாக்குதல் தொடரபாக அல் ஜசீரா டிவி சேனலிடம் பேசிய ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் கலீத் குடோமி, பல பத்தாண்டுகளாக பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு பதிலடிதான் இந்த தாக்குதல். காஸா முனையில் பாலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறைகளை நிறுத்த சர்வதேசம் முன்வர வேண்டும் என்பதற்காகவே இத்தாக்குதல் என்கிறார். ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தெய்ப், பூமியில் இனி ஆக்கிரமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் இத்தாக்குதல் நடத்தப்படுகிறது என்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த யுத்தத்தில் நாங்களே வெல்வோம் என்கிறார். இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கால்லன்ட், இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல் மூலம் ஹமாஸ் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது; நிச்சயம் பாடம் கிடைக்கும் என்கிறார்.