கேரளாவின் சமூக ஆர்வலரான ரெஹானா பாத்திமா அரைநிர்வாண படத்தை வெளியிட்டிருந்தார். அத்துடன் அரைநிர்வாணமாக இருக்கும் தனது உடலில் அவருடைய மைனர் குழந்தை ஓவியம் தீட்டுவது போன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இது கேரளாவில் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது. இதனால் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்குகளை ரத்து செய்யும்படி ரெஹானா விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ரெஹானா கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்யப்ட்டது. ஆண்கள் மேலாடை இல்லாமல் தோன்றுவது ஆபாசம் இல்லை எனக் கருதப்படும்போது, பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடு என்பது என்ன நியாயம். சட்டம் என்பது எல்லா பாலினத்தினருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கவுசர் எடப்பாகத் இந்த வழக்கு தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
ரெஹானா தனது உடலை படம் வரைய மட்டுமே பயன்படுத்தியுள்ளார். ஒரு தாயின் மேல் அரைநிர்வாணத்தில், அந்த தாயின் குழந்தைகள் படம் வரைவதை உண்மையான அல்லது உருவகப்படுத்தப்பட்ட பாலியல் செயலாக வகைப்படுத்த முடியாது அல்லது பாலியல் திருப்திக்காகவோ அல்லது பாலியல் நோக்கத்திற்காகவோ அதைச் செய்ததாகக் கூற முடியாது.
குற்றம் விளைவிக்கக் கூடியது இல்லாத ஒரு கலை வெளிப்பாட்டை, உண்மையான அல்லது உருவகப்படுத்தப்பட்ட பாலியல் செயலில் ஒரு குழந்தையைப் பயன்படுத்துவதாகக் கூறுவது கடுமையானது
குழந்தைகளை ஆபாசப் படங்களுக்கு பயன்படுத்தியதாகக் காட்ட அதில் எதுவும் இல்லை/
வீடியோவில் பாலுறவு பற்றி குறிப்பு ஏதும் இல்லை. ஒரு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு நபரின் நிர்வாண மேல் உடலில் ஓவியம் வரைவது வெளிப்படையான பாலியல் செயல் என்று கூற முடியாது.
அரசு தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, அந்த வீடியோவில் பாத்திமா தனது மேல் உடலை அம்பலப்படுத்தியதாகவும், அது ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் இருந்ததாக குறிப்பிட்டார்.
அதற்கு நீதிபதி நிர்வாணம் மற்றும் ஆபாசம் இரண்டும் ஒரே பொருள் உடையதாக எப்போதும் இருந்ததில்லை என்றார்.
அடிப்படையில் நிர்வாணத்தை ஆபாசமான அல்லது அநாகரீகமான அல்லது ஒழுக்கக்கேடானதாக வகைப்படுத்துவது தவறு.
ஆண்கள் மேலாடை இல்லாமல் இருப்பது ஆபாசம், அநாகரீகம் என்று பார்ப்பது இல்லை. பாலுறவு ரீதியாகவும் பார்ப்பதில்லை. ஆனால், பெண்களுக்கு அவ்வாறு பார்ப்பதில்லை.
ஒவ்வொரு தனிநபரும் அவனது/அவள் உடலின் சுயாட்சிக்கு உரிமையுடையவர். ஆனால் நியாயமான பாலினத்திற்கு இது அவ்வப்போது மறுக்கப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. இந்த விசயத்தில் பெண்கள் ஆடை கட்டுப்பாடு என்ற வகையில் துன்புறத்தப்படுகிறார்கள்.
நிர்வாணத்தை செக்ஸ் உடன் இணைக்கக் கூடாது. பெண்கள் அரைநிர்வாணத்தை இயல்பாகவே பாலுறவு ரீதியில் எண்ணக் கூடாது. மேலும், ஒரு பெண்ணின் நிர்வாண உடலை சித்தரிப்பதை ஆபாசமானதாகவோ, அநாகரீகமாகவோ அல்லது வெளிப்படையான பாலியல் ரீதியாகவோ குறிப்பிட முடியாது.
ஒழுக்கமும் குற்றமும் இணைந்தவை அல்ல. தார்மீக ரீதியாக தவறாகக் கருதப்படுவது சட்டப்பூர்வமாக தவறாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.