தமிழ்நாடு கவர்னர் ரவி, திமுக அரசையும், தமிழ் மக்களையும், அவர்களது கலாசாரத்தையும் கெர்சைப்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் வகையிலும் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு செயல்படுகிறார். தமிழ் சிறந்த மொழி என்பார். அடுத்தவரியில் தமிழர்களை சிறுமைப்படுத்துவார். இதை ஜால்ரா போட்டு ஆமாம் போட ஒரு கூட்டம் தமிழ்நாட்டிலும் இருந்து கொண்டு இருக்கிறது.
இந்தியாவை அடிமைப்படுத்தி நம்மை ஆண்டு கொண்டிருந்த வெள்ளகை்காரனுக்கு எடுபிடி , ஏவல் செய்து வயிறு வளர்த்த கூட்டம் அன்றும் இருந்தது. அதுபோன்ற கூட்டம் இன்றும் இருக்கிறது. எனவே தான் கவர்னர் என்ன சொன்னாலும் அதை கண்டிப்பதில்லை.
இந்த நிலையில் ஊட்டியில் துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டிய ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நையாண்டி செய்தார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடு முரசொலி, பழமொழிகள் என்ற தலைப்பில், பல பழமொழிகளை சுட்டிக்காட்டி கடும் கண்டனத்தை தெரிவித்து ஒரு கட்டுரை எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஆளுநருக்குத்தான் வேலையில்லை என்றால் தங்களுக்கு தரப்பட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் துணைவேந்தர்களை அழைத்து வைத்துக் கொண்டு’மேய்ற மாட்டை நக்கிடும் மாடு’- வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
“ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே…” எனும் பழமொழிக்கேற்ப தமிழ்நாட்டு அரசின் செலவில் மனிதர் சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
‘சுக்ரயோகம்’ என்பார்களே அது போன்ற யோகக்காரர்கள் இந்தியாவின் ஆளுநர்கள்! நமது தமிழ்நாட்டு ஆளுநர் ரவியையே எடுத்துக் கொள்ளுங்களேன்!
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து அவர்களிடம் தனது அறிவாற்றலைக் காட்டுவதாக நினைத்து, தான் ஒரு ‘Half boiled’, அதாவது பாதி வெந்தவர் என்பதை ஆளுநர் ரவி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்!
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசப் போவதாக அறிவித்து, துணைவேந்தர்களுக்கு சம்பந்தமில்லாத தொழில் முதலீடுகளைப் பற்றி பேசி தனது முதிர்ச்சியற்ற அறிவை வெளிப்படுத்தியுள்ளார்!
ஆளுநர் ரவி பல நேரங்களில், தான் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ‘ஆப்பசைத்த குரங்காய்’ அகப்பட்டுக் கொள்கிறார்!
‘விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்குவது’ – எனப் பழமொழி கூறுவார்களே, அதுபோல வேண்டாத விவகாரங்களில் தலையிட்டு ‘சனியனை’ விலைகொடுத்து வாங்குவதில் ஆளுநர் ரவிக்கு பல நேரங்களில் ஒரு அற்ப சந்தோசம்!
சுய விளம்பரம் தேடி தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டு பல நேரங்களில் வாலறுந்த நரியாக ஆனாலும் அவர் பாடம் பெறுவதில்லை! மீண்டும் மீண்டும் வாலை நுழைத்து ஆழம்பார்க்கிறார்!
அவருக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறோம்; இது தமிழ்நாடு! ஆளுவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! இங்கு இவரது பருப்புகள் வேகாது!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.