கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மஞ்மெல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவை விட தமிழகத்தில் இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தை பார்த்த பலரும், கொடைக்கானல் குணா குகையை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று வருகை தருகின்றனர். இதன்காரணமாக குணா குகையை பார்வையிட வருவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குணா குகையை பார்வையிட படையெடுத்து வந்தனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஜல்லிக்கல் கிராமத்தை சேர்ந்த பாரத் (வயது 24) மற்றும் அவருடைய நண்பர்களான பையூரை சேர்ந்த விஜய் (24), ராணிப்பேட்டை மாவட்டம் மலமேடு பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) ஆகியோர் கொடைக்கானல் குணா குகை பகுதிக்கு வந்தனர். அப்போது 3 பேரும் குணா குகையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புவேலிகளை தாண்டி தடையை மீறி உள்ளே சென்றனர். குணா குகைக்கு செல்லும் பாதையில் நின்றபடி அவர்கள் புகைப்படம் எடுத்தனர். பின்னர் குணா குகையின் உட்புற பகுதிக்கு செல்ல ஆரம்பித்தனர். ஒருவர் இறங்க மற்ற 2 பேரும் இறங்க முயற்சித்துக்கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் ரோந்து வந்த வனத்துறையினர், 3 வாலிபர்கள் குணா குகைக்கு செல்ல முயன்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை எச்சரித்து மேலே வரவழைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது குணா குகையை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளே நுழைய முயன்றதாக தெரிவித்தனர். இதையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட பாரத், விஜய், ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குணா குகை பகுதி மிகவும் ஆபத்தானது. எனவே தடையை மீறி யாரும் குகை பகுதிக்கு செல்லக்கூடாது. மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.