திருச்சி காந்தி மார்க்கெட் சௌராஷ்ட்ரா தெரு அருகே மன்னார் பிள்ளை சந்து பகுதியில் இன்று காலை சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது சாக்கடை கழிவுகளை மேலே எடுத்து வெளியே கொட்டியபோது அதில் வித்தியாசமாக ஏதோ ஒரு பொருள் தென்பட்டது. அதை சுத்தம் செய்து பார்த்தபோது, அது ஏர் பிஸ்டல் துப்பாக்கி என தெரியவந்தது. இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசாருக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் ஏர் பிஸ்டல் துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த துப்பாக்கியை சாக்கடைக்குள் வீசியது யார்? லைசென்ஸ் வாங்காமல் துப்பாக்கியை பயன்படுத்தி வந்த நபர் தான் இதனை வீசியிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.