கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன் மகன் தியாக இளையராஜா (46). திமுக பிரமுகர், தற்போது மணவாளநல்லூரில் உள்ள தனது விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். விருத்தாசலத்தில் வள்ளலார் குடில் என்ற முதியோர் மற்றும் சிறுவர் இல்லம் நடத்தி வருகிறார். அதே மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகர் மகன் புகழேந்தி ராஜா (25). அதிமுக ஓபிஎஸ் அணியில் கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது சகோதரர் ஆடலரசு (22).இவர்களுக்கும், இளையராஜாவுக்கும் தேர்தல் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், இளையராஜா தனது விவசாய நிலத்திற்கு சென்று நிலத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்புவதற்காக தனது கார் நின்ற இடத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த ஆடலரசு, புகழேந்தி ராஜா மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் இளையராஜாவை தாக்க முயற்சித்தனர். சுதாரித்த இளையராஜா காரின் கதவை திறக்க சென்ற போது ஆடலரசு தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் இளையராஜாவை நோக்கி சுட்டுள்ளார். இதில் இளையராஜாவின் இடுப்பின் பின்பக்க பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. தொடர்ந்து காரை திறந்து காருக்குள் உட்கார்ந்து காரை இளையராஜா எடுத்தபோது காரின் முன்பக்க கண்ணாடி மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் கார் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து, துகள்கள் இளையராஜா மீது விழுந்தது. இதையடுத்து காயங்களுடன் இளையராஜாவே காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் புகழேந்தி ராஜா மற்றும் கும்பலை தேடி வருகின்றனர். புகழேந்தி ராஜா தரப்பினர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக இளையராஜா போலீசில் புகார் செய்து வந்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது..