Skip to content
Home » காற்றாடி திருவிழா.. நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சாவு – 130 பேர் காயம் ..

காற்றாடி திருவிழா.. நூல் கழுத்தை அறுத்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் சாவு – 130 பேர் காயம் ..

குஜராத் மாநிலத்தில் மகர சங்கராந்தியையொட்டிநேற்று உத்தராயண பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது மக்கள் வண்ண வண்ண பட்டங்களை ( காற்றாடி) பறக்கவிட்டு குதூகலிப்பது பிரசித்தமான வழக்கம்.  நேற்றைய தினம் பவநகரில் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கீர்த்தி என்ற 2 வயது சிறுமியின் கழுத்தை காற்றாடி நூல் அறுத்தது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். அதேபோல, விஸ்நகரில் தனது தாயுடன் தெருவில் நடந்து சென்ற கிஸ்மத் என்ற 3 வயது பெண்குழந்தை, காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அக்குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராஜ்கோட் நகரில் ரிஷப் வர்மா என்ற 7 வயது சிறுவன், காற்றாடி வாங்கிக்கொண்டு பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக பலியானான். இதேபோல வதோதரா, கட்ச், காந்திநகர் மாவட்டங்களில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் காற்றாடி நூலால் கழுத்து அறுபட்டு செத்தனர். காற்றாடி நூலால் மேலும் 130 பேர் காயமடைந்தனர். உயரமான இடங்களில் இருந்து காற்றாடி பறக்கவிட்டபோது கீழே தடுமாறி விழுந்த 46 பேரும் காயமுற்றனர். அதேபோல் உத்தராயண பண்டிகையின்போது குஜராத்தில் சாலை விபத்துகளும் அதிகரித்தன. கடந்த சனிக்கிழமை 820 பேரும், வெள்ளியன்று 461 பேரும் சாலை விபத்துகளில் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *