Skip to content
Home » இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

இலங்கை தமிழ் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் பயிற்சி

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் இலங்கைத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான “கலங்கரை” தொழில் வழிகாட்டுதல் பயிற்சியை நடத்தியது.இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள 103 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 57,772 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 2023-24ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த 2,256 மாணவ, மாணவியர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் பயிற்சி 29 மாவட்டங்களில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் நேற்று (மே 29) நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (DPI CAMPUS), நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்வில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர் க.நந்தகுமார், மே 29 அன்று தொடங்கி வைத்து, (ZOOM) காணொளி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவ, மாணவியருக்கு இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் இதனால் ஏற்படவுள்ள நன்மைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

அதில், “கல்வி பயில்வதன் மூலம் மட்டுமே நமது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். எனவே தாயகம் திரும்பிய தமிழர்களான முகாம் மாணவர்கள் நன்கு படித்து நல்ல பணியில் அமர்ந்து தங்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டும். முகாம் வாழ் மாணவர்கள் அனைவருக்கும் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான செலவுகள் அனைத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும்.” என்று கூறியதுடன், தனி நபர்களின் திறன்கள் மற்றும் திறமைகளைக் கண்டறிந்து, இந்தத் திறன்களை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்தக்கூடிய தொழில்களை நோக்கி அவர்களை வழிநடத்துவதில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி இலங்கைத் தமிழர்களுக்கு கல்வி உதவி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு இந்த தொழில் வழிகாட்டல் திட்டம் ஒரு முக்கிய சான்றாகும் என்று கூறினார்.

“ஒவ்வொரு வருடமும் கல்வி வழிகாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முகாம்களிலும் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் படித்த முகாம் வாழ் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!