குரூப்-4 பணியிடங்களுக்கு தேர்வானோர் பட்டியலை ஜன.8-க்குள் இணையதளத்தில் வெளியிட, டிஎன்பிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா, முத்துலட்சுமி உள்ளிட்ட பலர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தேர்வில் நாங்களும் பங்கேற்றோம். தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. தேர்வில் எங்களுக்கு 255 மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.
குரூப்-4 தேர்வில் விடைத்தாள் மோசடி நடைபெற்றுள்ளது. இதனால் எங்களுடைய விடைத்தாள் நகல் கேட்டு. உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம் உத்தரவிட்டதால், எங்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதை ஆய்வுசெய்தபோது, நாங்கள் அதிககேள்விகளுக்குப் பதிலளித்துள் ளோம். பணிக்கு தேர்வாகும் அளவுக்கு எங்களுக்கு மதிப்பெண் வருகிறது. இருப்பினும், எங்களுக்கு பணி கிடைக்கவில்லை.