கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வு எழுதினார்கள். இந்திய அளவில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளிலும், அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட தேர்வாக இது சொல்லப்பட்டது. இந்த தேர்வு முடிவு பிப்ரவரி 24ல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது மேலும் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்து 7 மாதங்கள, ஆன நிலையிலும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பதால், தேர்வர்கள் எப்போது முடிவுகள் வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது ஏன்? எப்போது தேர்வு முடிவு வெளியிடப்படும்? என்பது தொடர்பான விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தேர்வில் எந்தவித தவறுகளுக்கும் இடம் அளித்துவிடக்கூடாது என்ற வகையில், தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இருபகுதிகளை கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாள்களின் இரு பகுதிகளை தனித்தனியே ஸ்கேன் செய்து அதில் உள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்படுகிறது. அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது.
விடைத்தாள்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுமார் 10 முதல் 17 லட்சத்து 50 ஆயிரம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது நடந்த தேர்வில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் தற்போதைய முறைகளின்படி, விடைத்தாள்களின் இரு பாகங்களையும் தனித்தனியே ஸ்கேன் செய்யும்போது, மொத்தமாக 36 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள்களின் எண்ணிக்கை வருகிறது. இது கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது ஏறக்குறைய 3 மடங்கு கூடுதலாக வேலையை உள்ளடக்கியதாக இருக்கிறது.
எந்த தவறுக்கும் இடம் தராமல் தேர்வு முடிவுகள் அடுத்த மாதத்தில் (மார்ச்) வெளியிடப்படும். ஆகையால் தேர்வர்கள் இந்தத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களை பொருட்படுத்த வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.