Skip to content

தமிழிசையின் தந்தை, குமரி அனந்தன் காலமானர்

  • by Authour

இலக்கியச்செல்வர் என்று  கலைஞர் கருணாநிதியால் அழைக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கவர்னர்  தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன்   நேற்று இரவு    காலமானார். அவருக்கு வயது 93.

வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  அங்கு  சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள்  அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தலைசிறந்த இலக்கியவாதியும்,  பேச்சாளருமான  குமரி அனந்தனின் மறைவு இலக்கிய உலகத்துக்கும்,   அரசியலுக்கும் பேரிழப்பு என  தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குமரி அனந்தன்  1980, 1984, 1989 மற்றும் 1991  ஆகிய 4 முறை எம்.எல்.ஏவாகவும்,  1977ல்  நாகர்கோவில் தொகுதி எம்.பியாகவும்  இருந்தவர்.  காந்தி, காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி சில காலம் நடத்தினார். பின்னர் காங்கிரசில் ஐக்கியமாகி விட்டார்.

குமரி அனந்தன் எம்.பியாக இருந்தபோது தான் மணியார்டர் பாரத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு வந்தார். இதற்காக அவர் நாடாளுமன்றத்தில் வாதாடி இதனை பெற்றுத்தந்தார்.   மணியாச்சி  ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என  பெயர் சூட்ட காரணமாக இருந்தவர். விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும் என  வாதாடி அதனை பெற்றவர்.  காமராஜரின் தீவிர   தொண்டர். காமராஜர்   தமிழ்நாடு  காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் குமரி அனந்தன்.

இவரது தம்பி தான் வசந்த் அன்கோ   வசந்தகுமார்.

குமரி அனந்தன் மறைவுக்கு  ராகுல் காந்தி, சோனியா காந்தி,   மாநில காங்கிரஸ் தலைவர்  செல்வப்பெருந்தகை,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ,,  பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குமரி அனந்தனை கவுரவித்து, தமிழக அரசு  தகைசால் தமிழர் விருது வழங்கியது.  தமிழுக்கு அவர் செய்த தொண்டுக்காக முதல்வர் ஸ்டாலின், குமரி அனந்தனுக்கு அரசு வீடு வழங்கினார்.  குமரி அனந்தன் மறைவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

குமரி அனந்தன்  தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக  சொற்பொழிவாற்றுவார்.  பல நூல்களை  எழுதி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ம் தேதியன்று பிறந்தவர் குமரி அனந்தன். காமராஜரின் சீடராக விளங்கிய இவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மதுவிலக்கு உள்பட  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர்.

குமரி அனந்தனுக்கு  தமிழிசை உள்பட 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குமரி அனந்தனின் மனைவி கிருஷ்ணகுமாரி ஏற்கனவே காலமாகி விட்டார்.

error: Content is protected !!