தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு காலம் மற்றும் இறப்புக்கு பின் வழங்கப்படும் பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து
தமிழக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி, ஓய்வு கால பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை ஆகியவை, 2016 ஜனவரி 1ம் தேதி கணக்கிட்டு, ரூ..10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியது.
இந்நிலையில், மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல், 7வது சம்பள கமிஷனின் பரிந்துரைப்படி, ஓய்வு கால பணிக்கொடை மற்றும் இறப்பு கால பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனால் தமிழக அரசும் பணிக்கொடை உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த முடிவெடுத்துள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும், இதன் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஓய்வுபெற்ற தமிழக அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர், தகுந்த உத்தரவுகளை கருவூல அதிகாரிகள், சார் கருவூல அதிகாரிகள், ஓய்வூதிய வழங்கல் அதிகாரிகளுக்கு வழங்கி, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் உத்தரவின் மூலம் ஏராளமான ஓய்வு அலுவலர்கள் பயன் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.