மேட்டூர் அணையில் இருந்து கடந்த 27ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரமாக திறக்கப்பட்ட தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்படுகி்றது. 27ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு மாயனூர் தடுப்பணையை கடந்து முக்கொம்பு நோக்கி வந்து கொண்டு இருந்தது.
இன்று காலை குளித்தலையை தாண்டி வந்தது. மதியம் 2 மணி அளவில் தண்ணீர்ப்பள்ளியை கடந்த முக்கொம்பு நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்று மாலை 6 மணிக்குள் முக்கொம்பு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கொம்பு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே கல்லணை நோக்கி செல்லும்படியாக அனைத்து மதகுகளும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது.
எனவே நாளை காலை தண்ணீர் கல்லணை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை காலை கல்லணையும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள்.