காவிரி டெல்டாசாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் அந்த தண்ணீர் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்தது .இதனை அடுத்து கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா, மெய்யநாதன் மற்றும் டெல்டா மாவட்ட கலெக்டர்கள் பொத்தானை அழுத்தி அணையை திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் நெல் விதைகள், மலர்கள் தூவப்பட்டு, காவிரி நீரை விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்றனர். முன்னதாக கல்லணையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கல்லணை திறக்கப்படுவதையொட்டி ஏற்கனவே கல்லணை வர்ணங்கள் பூசப்பட்டு பளீச்சென காணப்பட்டிருந்தது. அணையின் ஷட்டர்கள் எல்லாம் கடந்த வாரம் சீரமைக்கப்பட்டு சரியான நிலையில் இருக்கிறதா என உறுதி செய்யப்பட்டது.
காவிரியில் 1500 கன அடி, வெண்ணாற்றில் ஆயிரம் கன அடி, கல்லணை கால்வாயில் 500 கன அடி கொள்ளிடத்தில் 400 கன அடி வீதம் முதல் கட்டமாக தண்ணீர் திறப்புக்கப்பட்டது. இது படிப்படியாக உயர்த்தப்படும்.
அணை திறப்பு விழாவில் திருச்சி கலெக்டர் பிரவீன் குமார், தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, நாகை கலெக்டர் ஆகாஷ், திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ, புதுகை கலெக்டர் அருணா ஆகியோரும் பங்கேற்றனர்.
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையிலும், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் குறுவை அறுவடைக்கு தயாராகி விட்டது. மற்ற மாவட்டங்களில் இன்னும் 1 மாதம் ஆகும் என்பதால் இப்போது மேட்டூர் அணையில் இருந்து வந்துள்ள தண்ணீர் குறுவைக்கு மிகவும் பயனுள்ளது என்பதால் டெல்டா விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர்.