காவிாி டெல்டா மாவட்டங்களில் 5.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தண்ணீர் நேற்று கல்லணை வந்து சேர்ந்தது. எனவே இன்று காலை 10 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நகராட்சித்துறை அமைச்சர் கே. என். நேரு பட்டனை அழுத்தி அணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாய் ஆகிய 4 இடங்களுக்கும் தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீர் இன்னும் 5 நாட்களில் கடைமடையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அமைச்சர் நேரு, எம்.பி, எம்.எல்.ஏக்கள், கலெக்டர்கள் ஆற்றில் பூக்கள், நெல் விதைகளை தூவினர். முன்னதாக அணையில் உள்ள முனியப்பன், விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் எம்.பிக்கள் பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், கலெக்டர்கள் பிரதீப் குமார், தீபக் ஜேக்கப், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.