Skip to content
Home » தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

தஞ்சையில் கிராம சபைக் கூட்டம்… தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஒன்றியம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் பாகைணேஷ், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா அவர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார் வரவேற்றுப் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது:

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம். ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண். விவசாயிகள் கடன் அட்டை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த கிராமசபை கூட்டத்தில் விவாதித்து. பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து குழந்தைகளை உயர்கல்வி பெறும் வகையில் நன்கு படிக்க வைக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களில் பெண்கள் அனைவரும் சேர வேண்டும். தொழில் கடன் உதவியாக வங்கிக் கடனுதவி பெற மகளிர் சுய உதவிக் குழுவில் அங்கம் வகிப்பதால் முன்னுரிமை பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். பின்னர் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களையும், சிறந்த மகளிர் குழுக்களையும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) வித்யா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் இராஜேஸ்வரி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!