தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கவுண்டமணி. 80 வயதைக் கடந்தும் தற்போதும் கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர், கடந்த 1996ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் நளினி என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அதில், 22, 700 சதுர அடி பரப்பில் வணிக வளாகத்தை 15 மாதத்தில் கட்டி முடித்து ஒப்படைக்கும்படி, பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தார் கவுண்டமணி.
இந்த பணிக்காக ரூ. 3.58 கோடி ஒப்பந்தம் போடப்பட்டு, 1996 முதல் 1999 காலகட்டம் வரை ரூ. 1.4 கோடி கவுண்டமணி தரப்பில் அளிக்கப்பட்டது. ஆனால், 2003ம் ஆண்டு வரையிலும் கட்டுமான பணிகளைத் தொடங்காததால், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். நேரில் ஆய்வு செய்த போது ரூ.46. 51 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, கட்டுமான பணிகள் முழுமையாக முடித்த பின்னர் பணம் தராவிட்டால் அதை கேட்க முடியும். தற்போது முடித்திருக்கும் பணிகளை ஒப்பிடுகையில் ரூ. 63 லட்சம் அதிகமாகவே கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கவுண்டமணி வழங்கியுள்ளார். 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் கவுண்டமணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2008ஆம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கட்டுமான நிறுவனம், கடந்த 2021ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், கவுண்டமணியிடம் நிலத்தை வழங்க வேண்டும் எனும் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.