மதுரை மாவட்டம், மேலூர் அருகே தெற்குதெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. 9ம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள புங்கை மரத்தின் அருகே அமர்ந்து தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்கெனவே உறுதித் தன்மை இழந்திருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 13 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் உட்பட 16 பேருக்கு காயம் ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் காயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்காக சேர்த்தனர். தொடர்ந்து காயமடைந்த மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 16 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.