கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை, ஜெகதாபி, பழைய ஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம் சின்னம்ம நாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் சுமார் 30 -லட்சம் மதிப்பில் மேஜை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில்
அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், அரசு மாதிரி பள்ளி மண்டல ஒருங்கிணைப்பாளரும், ஜெகதாபி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான தீன தயாளன், இருபால் ஆசிரியர்கள், ஒன்றிய துணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, மாணவ மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும். அப்போது தான் அரசின் திட்டங்கள் அனைத்தும் மாணவ- மாணவியருக்கு கிடைக்கும் எனவும், கொரோனா காலத்திலும் மாணவ- மாணவியரின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காக “இல்லம் தேடி கல்வி” என்ற திட்டத்தை செயல்படுத்தியவர் தான் நமது தமிழக முதலமைச்சர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் பிள்ளைகளை உயர்கல்வி பயில்வதற்கு வசதி இன்மை காரணமாக பெரும்பாலானோர் அனுமதிப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், மருத்துவக் கல்வி பயில்வதற்கு 500 மதிப்பெண்கள் எடுத்தால்தான் இடம் கிடைக்கும் என்ற சூழலில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ஏழரை சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தற்போது 225லிருந்து 250 மதிப்பெண் பெற்றாலே மருத்துவக் கல்வி பயில அவர்களுக்கு இடம் கிடைக்கும் என்றார்.