அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலில் பள்ளி அளவில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கடந்த வாரம் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய வட்டாரங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள், மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி தனியார் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டியில் கலந்து கொண்டு கவின்கலை, நாடகம், தனித்திறன் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் தங்களை திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான
போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். மாநில போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவை மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.