தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அரசு கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார், கல்லூரி ஆலோசகர் பேராசிரியர் கோதண்டபாணி, நிர்வாக இயக்குனர் அரவிந்த் மற்றும் ஆடிட்டர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இட்லி புகழ் இனியவன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தொழில் செய்யும் போது ஏற்படும் இன்னல்களையும் அந்த இன்னல்களை எவ்வாறு களைந்து எறிய வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். மேலும் வெற்றி என்ற ஒன்றையே இலக்காக கொண்டு மாணவர்கள் உத்வேகத்துடன் உழைத்தால் அந்த இலக்கை மிகவும் எளிதாக அடைய முடியும் என்று தனது வாழ்வியலை உதாரணமாக விளக்கி எடுத்து கூறினார்.
விழாவில் சுமார் 210 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த அனைத்து மாணவர்களும் பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்டனர். முன்னதாக கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சுதாகர் வரவேற்றார். பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் துவக்க உரையாற்றினார். மேலும் பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கலைமணி சண்முகம் மற்றும் கல்வி புல தலைவர் முனைவர் ருக்மாங்கதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் பேராசிரியர் மகேஷ் அவர்கள் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் தம் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். கல்லூரியில் பயின்ற மாணவர்கள் அனைவருமே பணி நியமன ஆணை பெற்றது பெற்றோர்களை பெருமை அடையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.