கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்தை விட பல மடங்குக்கு சட்டவிரோதமாக சொத்து குவித்திருப்பதாக லோக் அயுக்தா போலீசாருக்கு புகார்கள் வந்தது. சட்டவிரோதமாக சொத்து குவித்திருக்கும் அதிகாரிகள் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வந்தார்கள். இந்த நிலையில், 12 அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று அதிகாலையிலேயே லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பெங்களூரு, பெங்களூரு புறநகர், சிவமொக்கா, துமகூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், யாதகிரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 55 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அதிகாரிகளின் வீடுகளில் இருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணம், கார்கள், இருசக்கர வாகனங்கள், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி அவர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த சோதனையின்போது அரசு அதிகாரிகள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பது தெரியவந்தது. தங்களது உறவினர்கள் பெயரில் சொத்துகள் வாங்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது வீடுகளில் சிக்கிய தங்க நகைகள், பணத்தை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றார்கள்.
சோதனைக்கு உள்ளான 12 அதிகாரிகளும் சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 12 அதிகாரிகளும் விசாரணைக்கு ஆஜராகவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள சர்வேதுறை அதிகாரி கட்டுப்பாட்டு அதிகாரி சத்தார் அலி என்பவரது வீட்டில் சோதனை நடத்துவதற்கு போலீசார் வருவதை அறிந்ததும் தனது வீட்டில் இருந்த பணம், தங்க நகைகளை ஒரு பையில் வைத்து பக்கத்து வீட்டில் அத்தார் அலி வீசியுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. உடனே போலீசார், பக்கத்து வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு பையில் ரூ.25 லட்சம் ரொக்கம், 2 கிலோ 200 கிராம் தங்க நகைகள், 2 வெள்ளி பொருட்கள் இருந்துள்ளது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்தார் அலி வீட்டில் சிக்கிய நகைகள், பணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சோதனையில் மொத்தம் ரூ.50 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த கை கடிகாரங்கள் மற்றும் கைதுப்பாக்கி ஆகியவையும் சிக்கியது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசாரின் தொடர் நடவடிக்கையால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
ஏற்கனவே கடந்த 11-ம் தேதி கர்நாடகத்தில் 11 அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.