கோவை, பொள்ளாச்சி அடுத்து அங்கலகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அங்கலக்குறிச்சி மற்றும் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ தேவைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம் போல அங்கலக்குறிச்சி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர் அப்போது முள்ளம்பன்றி ஒன்று அப்பகுதியில் தென்பட்டுள்ளது.இது குறித்து அறிந்த பொதுமக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் முள்ளம்பன்றியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற முள்ளம்பன்றி ஊர் பகுதிக்குள் புகுந்தது. தொடர்ந்து மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் முள்ளம்பன்றியை பிடித்து ஆழியார் அடர்ந்த வனப் பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.