Skip to content
Home » அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

அரசு மருத்துமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு…சாலைமறியல்… சிபிஎம் கட்சியினர் 19 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மரத்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய தொழிலாளி முருகேசன். இவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவ.2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதித்தார். அவருக்கு நவ.6-ஆம் தேதி ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை உடல் அசைவின்றி இருந்தால் மறுநாள் சிதம்பரம் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பினர். இந்நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

உரியநேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதப்படுத்தியதே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டி சிபிஎம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் முருகேசனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் குழந்தையின் உடலை சாலையில் கிடத்தி அவர்கள் மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். பல மணி நேரம் நீடித்த போராட்டத்தில், கோட்டாட்சியர் ஆர்.விஷ்ணுபிரியா, டிஎஸ்பி திருப்பதி

ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படாத காரணத்தால் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் பானுமதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கவனக்குறைவாக செயல்பட்ட மகப்பேறு மருத்துவரை பணிநீக்கம் செய்ய சிபிஎம் கட்சியினர் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் பணியில் இருந்து மகப்பேறு மருத்துவர் ரம்யாவை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் உத்தரவிட்டார். ஆனால், அதனை ஏற்க மறுத்த சிபிஎம் கட்சியினர் அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.

அப்போது, போலீஸார் குழந்தை உயிரிழந்து 12 மணி நேரத்துக்கு மேலாவதால், உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருப்பது சுகாதார சீர்கேடு, நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, போராட்டத்தைக் கைவிட்டு, உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போலீஸார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கூலர்பாக்ஸ் வரவழைத்து அதில் குழந்தையின் உடலை கிடத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, குழந்தையுடன் ப்ரீஷர் பாக்ஸை கைப்பற்றி வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர் 19 பேரை ஏடிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

கைது செய்யும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர், கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதில் மாவட்ட செயலாள சீனிவாசனை போலீசார் தாக்கியதாக கூறி குற்றம் சாட்டினர். அப்பகுதி வழியே 6 மணி நேரத்துக்கு மேலாக நீடித்திருந்தது. இரவு 10 மணிக்கு மேல் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனிடையே, மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு இந்திய மருத்துவர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!