தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் நாளை 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது… அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 2 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு கூடுதலாக டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு உள்ளிட்ட மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது.
டெங்கு போன்ற நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். 16,005 கொசு ஒழிப்பு புகை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 4,631 பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை 1000 சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட உள்ளன என இவ்வாறு கூறினார்.