அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த உடல் உறுப்புகள் தானம் செய்த பசுமைக்குமார் என்பவரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோவிந்தபுத்தூர் மதுரா காசாங்கோட்டை கிராமம், நாச்சியார் அம்மன் கோவில் தெரு என்ற முகவரியினை சேர்ந்த பசுமைகுமார் த/பெ துரைராஜ் (43/25) என்பவர் கடந்த 04.02.2025 அன்று பிற்பகல்
02.30 அளவில் மரத்தில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்ட காரணத்தினால் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பசுமைக்குமார் அவர்களுக்கு 07.02.2025 மூளைச் சாவு ஏற்பட்ட காரணத்தினால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்திட அவரது குடும்ப உறுப்பினர்களால் முடிவு செய்யப்பட்டு உடல் உறுப்புகள் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 07.02.2025 தானம் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்றையதினம் உடல் உறுப்புகள் தானம் செய்ததற்கு அரசு சார்பில் மரியாதை செய்யும் விதமாக பசுமைகுமாரின் உடலுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உடையார்பாளையம் வட்டாட்சியர் ஆகியோர்களால் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது சுத்தமல்லி பகுதி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.