மயிலாடுதுறை அருகே அரசால் வழங்கப்பட்ட மருந்துகள் மூட்டையாக கட்டப்பட்டு வாய்காலில் வீசப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலாவதியான மருந்துகள் மற்றும் காலாவாதியாகாத மருந்துகள் கிடப்பதால் உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை அருகே குளிச்சாறு கிராமத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர் மண்டியதால் சம்பா பயிர்கள் தண்ணீர் வடிய வழியின்றி நீரில் மூழ்கியது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் வேளாண் பொறியியல் துறையினரால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருகிறது.
தூர்வாரிய பகுதியில் ஒரு சாக்கு மூட்டையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகள் கிடந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த சாக்கு மூட்டையில் ஆயிரக்கணக்கான மாத்திரைகள் ஓ.ஆர்.எஸ். கரைசல், சிரஞ்சி ஊசிகள், சிரப் உள்ளிட்ட காலவதியாகாத மருந்துகளும் காலாவதியான மருந்துகளும் கிடந்தன.
அரசு மருத்துவமனைகளில் பல்வேறு மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்க சொல்வதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள் அரசால் வழங்கப்பட்ட மருந்துககளை சாக்குமூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பு வைப்பதில்லை என்று குற்றச்சாட்டு உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் சில வாரங்களுக்கு முன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்திய நிலையில் வாய்க்காலில் மருந்துகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.