நாகை மாவட்டம், பாலக்காடு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் நாகூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவருகின்றனர். காலையும் மாலையும் அரசு பேருந்தை நம்பியே பயணித்து வரும் மாணவ மாணவிகளுக்கு போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் அனுதினமும் அல்லல்பட்டு வருகின்றனர். திருவாரூரிலிருந்து ஆழியூர்,புலியூர்,பெருங்கடம்பனூர், வைரவன்காடு, பாலக்காடு வழியாக நாகப்பட்டினம் செல்லக்கூடிய ஒரே
ஒரு அரசு பேருந்தை நம்பி மட்டுமே நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயணித்து வருவதால் பாலக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பேருந்தில் திணிக்கப்பட்டு கூட்ட நெரிசலில், படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. எனவே கூடுதல் பேருந்தை இயக்கி விபத்துக்களை தவிர்த்து பள்ளி கல்லூரி மாணவிகள் எளிதாக பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.