அரசு கலைக்கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மே-8 முதல் 22-ந்தேதி வரைநடைபெற்றது. 164 அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில், அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசைப்பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது. கலந்தாய்வு நிறைவு பெற்றதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 22-ந்தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.