பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சட்டமன்றத்திற்கு எதிரானதாகவும், இறையாண்மைக்கு எதிராகவும் உள்ளது. ஒன்றிய அரசுக்கு அவருக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு நிதியை பெற்று தரலாம். ஆளுநர் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படலாம்
. ஆனால், மாநில அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தினந்தோறும் யாரைவாது கூட்டி வைத்துக்கொண்டு ஆளுநர் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும், ஆனால் தவறான பாடங்களை எடுக்கிறார். விழாக்களுக்கு செல்லட்டும், விதண்டாவாதம் பேசுகிறார். அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விமர்சிப்பது சரியல்ல.
இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடி திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டடதால் தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற கதவுகளை தட்ட நேர்ந்தது. அரசின் வாதங்களை கேட்டு உச்சநீதிமன்றம் பதில் அளித்திருப்பது தமிழ்நாட்டு அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டு வைத்ததும், கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சிலவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதுமாக உள்ளார்.