2025ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி முதல் அவைக்கு உறுப்பினர்கள் வரத் தொடங்கினர். 9.15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். 9.25 மணிக்கு கவர்னர் ரவி வந்தார். அவருக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை சபாநாயகர் வரவேற்று அழைத்து சென்றார்.
காலை 9 மணிக்கே சட்டமன்ற வளாகத்துக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். பின்னர் அதிமுகவினர் அனைவரும் யார் அந்த சார் என்ற பேட்ச் அணிந்தபடி சபைக்குகள் வரத் தொடங்கினர்.
அதிமுகவினர் யார் அந்த சார் என கோஷம் போட்டு சபையில் இ ருந்து வெளிநடப்பு செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கவர்னர் ரவி உள்ளே வந்ததும், அண்ணா பல்கலை சம்பவத்துக்கு கவர்னர் தான் பொறுப்பேற்க வேண்டும் என தவாக உறுப்பினர் வேல்முருகன் கோஷம் போட்டார். அதைத் தொடர்ந்து அதிமுகவினரும் கோஷம் போட்டனர். பதாகைகளை ஏந்தி கோஷம் போட்டனர். அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த நேரத்தில் கவர்னர் ரவி அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கூறினார். ஆனால் சபையில் வேல்முருகன், அதிமுகவினர் கோஷம் போட்டனர். அப்போது கவர்னர் பேரவையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் பாட அனுமதிக்கவில்லை என்று கூறிவிட்டு அவர் கிளம்பினார். அவர் கையில் உரை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதை வாசிக்காமல் கிளம்பிவிட்டார். அதைத் தொடர்ந்து அதிமுகவினரை சபை காவலர்கள் வெளியேற்றினர்.
கவர்னரின் இந்த செயலுக்கு பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர், போட்டி அரசாங்கம் நடத்த விரும்புகிறார் அவருக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தோம் என்று செல்வப்பெருந்தகை கூறினார். பின்னர் காங்கிரசார் சபையில் இருந்து வெளியேறினர்.
அதைத் தொடர்ந்து சபாநாயகர் கவர்னர் உரையை வாசித்தார்.