கடமை தவறிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.
இதுகுறித்து தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது. .ஆளுநர் திட்டமிட்டு, அதன் பின்னால் அரசியல் தூண்டுதல் இருக்கிறது என ஐயப்படும் வகையில் ஒவ்வொரு முறையும் அரசியல் சட்டத்தை மீறிக் கொண்டிருக்கிறார். இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒரு புறம் 75 ம் ஆண்டு கொண்டாடுகிற வேளையில், மறுபுறம் அரசியல் சட்டத்தை உடைக்கக்கூடியவர்களை உற்சாகப்படுத்துகிறது மத்திய அரசு.
கடந்த முறையும் அவர் போட்டி அரசு போல எழுதித்தரப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்ட உரையைப் புறக்கணித்தார். இந்த முறை உரையை அறவே புறக்கணிக்கும் விதமாக அவையை விட்டு வெளியே சென்றார். அதற்கு ஒரு பொருந்தாத காரணத்தைத் திருந்தாத வகையில் கூறி வருகிறார். கடமை தவறிய காரணத்துக்காக ஆளுநரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு போட்டி அரசு நடத்தி குறுக்குசால் ஓட்டுகிற ஆளுநர் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து கட்சியினரும் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.