சட்டமன்றத்தில் கவர்னர் வாசிக்க மறுத்த உரையின் தமிழ் ஆக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் விவரம் வருமாறு: சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். புதிய தொழில் தொடங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிரவாரண நிதியை மத்திய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது. 2ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.
பால் கொள்முதல் விலையை ரூ.6 உயர்த்தி இருப்பது வரலாற்று சாதனை. நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பு 5.59 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு கட்டும் அணையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1290 கோயில்களில் தமிழ் நாடு அரசு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். உரையை பாரதியுடன் பாடலுடன சபாநாயகர் நிறைவு செய்தார்.
தொடர்ந்து பேசி்ய சபாநாயகர் அப்பாவு: இந்த அவைக்கு என்று மரபு உள்ளது. நீங்கள்(கவர்னர்) தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்றீர்கள். உங்களுக்கு ஒரு கருத்து உள்ளது போல முதல்வருக்கு ஒரு கருத்து உள்ளது. இந்த அவைக்கு ஒரு கருத்து உள்ளது. இந்த சபையின் மரபு தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும். இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும். நீங்கள் கோட்சே வழி வந்தவர்கள், சாவர்கர் வழியில் வந்தவர்கள். உங்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. பிரதமர் மோடியின் பி.எம். கேரில் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு பணம் இருக்கிறது. அதில் இருந்து நீங்கள் வெள்ள நிவாரணமாக ரூ.50 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இவ்வாறு அப்பாவு பேசியபோதே கவர்னர் எழுந்து அவையில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு
தமிழக அரசு தயாரித்து ஆளுநருக்கு வழங்கிய உரை வாசிக்கப்பட்டதாக அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என அவை முன்னவர் அமைச்சர் துரை முருசன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. அதன்பிறகு தேசிய கீதம் பாடப்பட்டு அவை நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டது.