தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முக்கியமாக, மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 10-ந்தேதி விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாக தெரிவித்ததுடன், ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர்20-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தது.
இதற்கிடையே கடந்த 13-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி, தன்னிடம் நீண்ட காலமாக கிடப்பில் இருந்த 10 சட்ட மசோதாக்களையும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் கூட்டப்பட்ட தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில், மீண்டும் அந்த 10 சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு, அன்று மாலையே கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று டில்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.45 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி டில்லி புறப்பட்டு சென்றார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சென்றனர். அவர் இன்று உள்துறை அதிகாரிகளுடனும், சட்டநிபுணர்களுடனும் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.