நாகப்பட்டினத்தில் சமூக நலத்துறை மற்றும் வேளாண்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுவினர் என 158, பயனாளிகளுக்கு 2 கோடியே 29 லட்சம் ரூபாய்
மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் மெய்யநாதன், தமிழக மக்கள் சிறப்புடன் வாழ முதல்வர் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், அதனால்தான் உலக முதலீட்டாளர்கள் இங்கு வந்து தொழில் புரிவதாக கூறினார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் ஆர் என் ரவி கூறுவதை ஏற்க முடியாது என்றும், அமைதி மாநிலமாக திகழும் தமிழகத்தில், தவறு செய்பவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீதும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிச்சயம் நடவடிக்கை உண்டு என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வருவதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.