நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா நடைபெற்றது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், தமிழ்நாடு அரசின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாம் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட சுதந்திர போராட்ட களத்தில் முன்னணி வீரர்களை தவிர, பல வீரர்கள், வீராங்கனைகள் வரலாறு அறியப்படாமலே போனது. அவர்களை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களின் வாழ்கையை ஆவணப்படுத்தும் கடமை நமக்கு உள்ளது. தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அந்நியர்களை இந்த மண்ணைவிட்டு விரட்ட தியாகங்கள் செய்துள்ளனர். இதில் பலரது தியாகங்கள் அறியப்படாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் கண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்கள் ஒரு வருடம் முடிவில் ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் சிறப்பிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.