எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்க பாஜக கவர்னர்களை பயன்படுத்துவதாக அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகிறது. அதன்படி தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா மாநில கவர்னர்கள் ஆளுங்கட்சிகளுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருவதாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன.
பஞ்சாப், கேரள மாநில அரசுகளின் வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவர்னர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அல்ல, மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறியது. இந்த நிலையில் தமிழ்நாடு கவர்னர் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அரசுக்கே அனுப்பினார்.
உடனடியாக தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி அந்த மசோதாக்களை மீண்டும் சபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே , அரசு மீண்டும் மசோதாவை அனுப்பினால் அதற்கு ஒப்புதல் கொடுத்தாக வேண்டும் என்ற மரபை மீறி கவர்னர் ரவி , 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டார்.
தமிழக மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே கவர்னர் இதை செய்துள்ளார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தெரிவித்தார்.