இந்தியாவிலேயே ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகமான பணம் செலவழிக்கும் கவர்னர் மாளிகை தமிழ்நாடு கவர்னர் மாளிகை தான். இதற்கு காரணம் தமிழ்நாடு அரசு பணத்தில் கவர்னர் அவ்வப்போது தேநீர் விருந்து நடத்தி தனக்கு விருப்பப்பட்டவர்களை அழைப்பதுவும் ஒன்று. அப்படித்தான் கடந்த ஆண்டு சித்திரை 1ம் தேதி நடந்த தேநீா் விருந்து அழைப்புக்கு தமிழ்நாடு கவர்னர் ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது.அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என இடம் பெற்றிருந்தது.
இப்போது பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு கவர்னர் ரவி 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். இதற்காக அவர் அனுப்பி உள்ள அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சிடப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன் தமிழ்நாடு ஆளுநராக இருந்த ரவி, இப்போது தமிழக ஆளுநர் என தன்னை மாற்றிக்கொண்டு இருக்கிறார்.
தேநீர் விருந்துக்கான அழைப்பிதழ் எம்.பி, எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை சுவெங்கடேசன் எம்.பிக்கு வந்த அழைப்பிதழை அவர் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதில், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய அதே வேகத்தோடு தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறும்போது, தமிழ்நாடு என சொல்லமாட்டேன் என்ற உறுதியோடு ரவி தமிழ்நாட்டில் கவர்னராக இருக்கிறார். மொத்தத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளை உரசிப்பார்க்கும் வேலையில் அவர் ஈடுபட்டு உள்ளார். இத்தனைக்கு பிறகும் தமிழ் உணர்வு உள்ளவர்கள் யாரும் இந்த தேநீர் விருந்துக்கு செல்வார்களா என்பது தெரியவில்லை என்றனர்.