அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன் அவருக்கு இருதய ஆபரேசன் நடந்தது.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கவர்னரை வலியுறுத்தி வந்தார். அதுபோல கவர்னரின் எண்ணத்திற்கு ஏற்றவகையில் அதிமுகவினரும் கவர்னர் ரவியை சந்தித்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கவர்னர் ரவி அறிவித்தார். இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, அமைச்சரை நீக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது. இதை சட்டப்படி சந்திப்போம் என கூறினார்.
கவர்னரின் இந்த நடவடிக்கை இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக, அதிமுக தவிர அனைத்து கட்சியிரும் கவர்னரின் நடவடிக்கையை கண்டித்தனர். இன்று உச்சநீதிமன்றத்தை அணுகவும் ஆயத்தமானார்கள்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கவர்னரிடம் இருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அதில், செந்தில் பாலாஜி நீக்கும் நடவடிக்கை கிடப்பில் போடப்படுகிறதுஎன கூறப்பட்டு இருந்தது.
பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டநிபுணர்களின் கருத்து கேட்கும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் திமுக முன்னோடிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதில் கவர்னரின் நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் விரிவான பதில் அளிப்பது என்றும் இன்று இது தொடர்பாக கவர்னருக்கு முதல்வர் கடிதம் எழுதுவது என்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆலோசனை கூட்டம் முடிந்ததும் சென்னை தலைமைச்செயலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்ட அமைச்சர் ரகுபதி, தி.மு.க. எம்.பி. வில்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
ஆளுநர் விவகாரத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை நியாயமாக விசாரிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. செந்தில் பாலாஜியை தனிமைப்படுத்தி குற்றஞ்சாட்டுவதற்கான அவசியம் என்ன? குற்றம்சாட்டப்பட்டதால் செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய இயலாது. செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.
அமைச்சரவை விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநர் அதிகாரம் தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் ஏராளமானோர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு உள்ள மத்திய அமைச்சர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்களா?. இல்லாத பூனையை இருட்டு வீட்டில் தேடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
திமுக அரசு பிரச்சனைகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயக்கம் காட்டியது இல்லை. அவசர கதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை, அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் சொல்லும் சட்டப்பிரிவுகள் சரியானதா?. உச்சநீதிமன்ற கருத்துக்களை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜி நீக்கம் என ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் செந்தில் பாலாஜி வழக்கிற்கும் தொடர்பு இல்லை என தி.மு.க. எம்.எபி. வில்சன் கூறினார்.