சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1வது நுழைவுவாயில் முன் கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக அவர் கூறினார்.
பின்னர் கருக்கா வினோத்தை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கு விவரங்களை தமிழக போலீசாரிடம் இருந்து என்ஐஏ வாங்கியது. எனவே கருக்கா வினோத்தை என்ஐஏ அதிகாரிகள் இனி காவலில் எடுத்து விசாரிப்பார்கள் என தெரிகிறது.