பெண் மீது அரசு பஸ் மோதி படு காயம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிடவன்குடியை சேர்ந்த பழனிசாமி மனைவி முருகவேணி (வயது48). இவர் இன்று காலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் வ. உ. சி சாலையில் நுழைவு வாயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிர் திசையில் வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக முருகவேணி மீது மோதியது. இதில் இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்த முருகவேணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முருகவேணியின் மகன் குணா கொடுத்த புகாரின்பேரில், திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி ரோடு அன்பிலார் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 39) இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்.இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பிரோவை உடைத்து அதிலிருந்து 2
பவுன் நகையை திருடிக்கொண்டு ஓடிவிட்டனர். இது தொடர்பாக செல்வராஜ் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலைவிசி தேடி வருகின்றனர்.
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30) இவருடைய மனைவி அம்சவள்ளி ( 25 ) இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். குழந்தை இல்லை. குழந்தை பாக்கியம் கிடைக்காததால் செந்தில்குமார்
வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். பின்னர் நேற்று மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.