அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து ஒன்று விரைந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த குரு பிரசாத் என்பவர் தனது காரில் வேலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி கடைவீதி அருகே வரும் போது வேகத்தடை அருகே காரை ஓட்டி வந்த குரு பிரசாத் பிரேக் பிடித்துள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற குருபிரசாத் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த குரு பிரசாத் உள்ளிட்ட 3 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
