முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என கடந்த டிச., 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் காரணமாக உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதை எதிர்த்து பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. ஏற்கனவே தண்டனை நிறுத்தி வைத்த நிலையில், இப்போது குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் மூலம் அவர் மீண்டும் எம்எல்ஏவாக ஆனார், இதனைத்தொடர்ந்து பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்து செய்து ஆளுநர் ரவிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். இந்த நிலையில்
பொன்முடியை அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என முதல்வருக்கு ஆளுநர் ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம் தண்டையைத் தான் நிறுத்தி வைத்துள்ளது என்றும் குற்றவாளி இல்லை என்று கூறவில்லை என ஆளுநர் ரவி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரபர கடிதம்: முதல்வருக்கு ஆளுநர் ரவி எழுதியுள்ள கடிதத்தில், ‘உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் மட்டும் தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை அவர்கள் தந்திருக்கலாம். இருப்பினும் பொன்முடி நிரபராதி எனத் தீர்ப்பளிக்கவில்லை, அவர் மீதான குற்றங்கள் அனைத்தும் அப்படியே இருக்கிறது. எனவே பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது” என்று மறுத்துள்ளார். மேலும், இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அமையும் என்றும் ஆளுநர் ரவி தனது கடிதத்தில் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி எழுதிய கடிதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.